கிரைம், திரில்லர் படத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக்
|கிரைம், திரில்லர் படத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர்.
சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து `கிரிமினல்' என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தட்சிணா மூர்த்தி டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் அதில் இருந்து `கிரிமினல்' திரைப்படம் விதிவிலக்காக இருக்கும்.
நகரத்தில் நடக்கும் கிரைம்-திரில்லரை அடிப்படையாகக் கொண்டு தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம். ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து, `உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்டார்.
எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் அதிக பொருட் செலவில் சிறப்பாக வந்துள்ளது" என்றார். பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை:சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ்.குமார்.