நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
|ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர், எம்டன் மகன், களவாணி, தென்மேற்கு பருவக்காற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் அம்மா வேடத்தில் முத்திரை பதித்தார். தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே ஹீரோக்கள் முதலில் தேர்வு செய்வது சரண்யா பொன்வண்ணனைதான் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி சிசிடிவி காட்சிகளை சமர்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோல, நடிகர் சரண்யா பொன்வண்ணனின் காரை சேதப்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஸ்ரீதேவி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை சரண்யா சார்பாக அவரது கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். இருவரது புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.