சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் பூஜையுடன் தொடக்கம்
|சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
சென்னை,
சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று (ஜூலை 7) பூஜையுடன் தொடங்கியது. தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்," என்று கூறினார்.
'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் கையாள, ஆப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர். திரை உலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பூஜை இன்று நடந்த நிலையில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.