'நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது...'- சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்
|சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சமீரா ரெட்டி.
சென்னை,
தமிழில் அஜித்குமாருடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், விஷாலுடன் வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகும். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சமீரா ரெட்டி.
'நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது என்னைச் சுற்றி இருந்த பலர் மார்பக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தினார்கள். சினிமாத் துறையில் இருந்த பலர் அதை செய்துகொள்வதாக சொல்லி நீங்களும் ஏன் செய்துகொள்ளக்கூடாது என என்னிடம் சொன்னார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஒரு சில நல்ல கம்பெனிகள் அந்த மாதிரியான தவறான முடிவுகளை நான் எடுக்காததற்கு காரணமாக அமைந்தன.
ஒருவர் மார்பக சிகிச்சை செய்துகொள்கிறார் என்றால் நான் அவரைத் தவறாக நினைக்க மாட்டேன். ஆரம்பகாலத்தில் நான் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பதிவிடும்போது பில்டர் பயன்படுத்தச் சொல்லி எனக்கு நிறைய கமெண்ட்ஸ்கள் வந்தன. ஆனால் இதுதான் என்னுடைய நிறம், இதுதான் என்னுடைய எடை. நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.