குஷி புரமோஷனில் சமந்தா அருகில் உட்கார இத்தனை லட்சமா...?
|சில மணி நேரம் மட்டுமே நடக்க உள்ள நிகழ்ச்சிக்காக நடிகை சமந்தா ரூ.30 லட்சம் சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
டல்லாஸ்
முன்னணி நடிகையான சமந்தா உடன் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருக்கும் 'குஷி' படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
குஷி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதே போல் நடிகை சமந்தா அமெரிக்காவில் அப்படத்தை புரமோட் செய்து வருகின்றார்.
அமெரிக்காவில் நாளை (ஆகஸ்ட் 25) டல்லாஸில் நடைபெற இருக்கும் குஷி பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை சமந்தா பெரும் தொகையை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் சில மணி நேரம் மட்டுமே நடக்க உள்ள அந்நிகழ்ச்சிக்காக நடிகை சமந்தா ரூ.30 லட்சம் சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவின் ரசிகர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதுவும் சும்மா அல்ல, காசு கொடுத்தால் தான் ரசிகர்களுக்கு என்ட்ரி என்று அறிவித்தனர். அதன்படி இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து, அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
ரூ.2 லட்சம் கொடுத்தால் நிகழ்ச்சியை சமந்தாவின் அருகில் அமர்ந்து கண்டுகளிக்கலாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டன.