மயோசிடிஸ் நோய் பற்றி பொதுவெளியில் பகிர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது - சமந்தா
|நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
பிரபலமான நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அது அவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் வெகுவாக தாக்குகிறது. மேலும் தாங்க முடியாத வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கக் கூடும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் தசைகள் மிகவும் வலுவிழுந்து காணப்படும்.
மயோசிடிஸ் நோய் தாக்கிய பிறகு தன்னுடைய உடற்பயிற்சியினோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் ப்ரோட்டோக்கால் டயட் என்னும் கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார். மயோசிடிஸ் நோய்க்காக ஏற்கனவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் உடல்நிலை சற்று தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்தார்.
நடிகை சமந்தா தனது ஆட்டோ இம்யூன் டயட் , மயோசிடிஸ் நோய் பற்றி பொதுவெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார். 2022-ம் ஆண்டு யசோதா படம் வெளியாவதற்கு முன்னதாக தனக்கு மயோசிடிஸ் நோய் இருந்தாக அவர் கூறியுள்ளார். தனது 14 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் சில ஆண்டுகள் மகிழ்ச்சியற்றவை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமந்தா கூறுகையில், "எனது நோய் பற்றி நான் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அந்த நேரத்தில், பெண்களை மையமாகக் கொண்ட நான் நடித்த படம் ரிலீஸுக்கு வரவிருந்தது. அப்போது நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஊடகங்கள் வாயிலாக எனது உடல்நிலை பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டன. தயாரிப்பாளர்களுக்காக நான் நடித்த படத்தை விளம்பரப்படுத்த வேண்டியிருந்தது. அதனால் நான் கலந்துரையாலுக்கு ஒப்புக்கொண்டேன். என்னை நன்றாக வைத்திருக்க அதிக அளவு மருந்துகளை எடுத்துக்கொண்டேன்.
பொதுமக்களால் நான் அனுதாப ராணி என்று அழைக்கப்பட்டேன். எனது திரைப்பட வாழ்க்கையில், நான் கவலையுடன் என்னைப் பற்றிய மோசமான குற்றசாட்டுகளை இணையத்தில் தேட தொடங்கினேன். எனது திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தபோது, எனது நோயின் காரணமாக என்னால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை"என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினாலும், அவ்வப்போது பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அவர் வரவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு முன்புபோல திரையில் ஜொலிக்க வேண்டும் என சமந்தா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.