கேலி செய்தவர்களை சாடிய சமந்தா
|சமந்தா, நாகசைதன்யா இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி, கேலி செய்தவரை நடிகை சமந்தா சாடி உள்ளார்.
நாகசைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவுக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு இருப்பதால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அமெரிக்கா சென்று இருக்கிறார்.
சமந்தாவும், நாகசைதன்யாவும் ஒன்றாக இருந்த நாட்களில் ஒரு நாய்க்குட்டியை வளர்த்தனர். அதற்கு ஹாஷ் என்று பெயர் வைத்தனர். விவாகரத்து ஆனதும் நாய்க்குட்டியை சமந்தா தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார்.
சமந்தா வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்களில் நாய்க்குட்டியும் கூடவே இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நாகசைதன்யா தனது ஊழியர் வாங்கிய பைக்கை ஓட்டிப்பார்க்கும் வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோவில் எதிர்பாராமல் ஹாஷ் நாய்க்குட்டியும் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டனர்.
இது சமந்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக, "உங்களுக்கு அறிவு இல்லையா? வேலையில்லாமல் இருக்கிறீர்களா... சும்மா இருந்தால் தயவு செய்து ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள், அறிவாவது வளரும்'' என்று பதிவிட்டு சாடி உள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.