நண்பர் பாபா சித்திக் மரணத்தால் தூங்காமல் தவிக்கும் சல்மான் கான்
|மும்பையில் சல்மான் கானின் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார். பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை. பாபா சித்திக் மரணத்தால் சல்மானின் குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாபா சித்திக் சல்மான் கானின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.
பாபா சித்திக்கின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்களை அவரது குடும்பத்தினரிடம் சல்மான் கான் கேட்டறிந்தார். சல்மான் கான் அடுத்த சில நாட்களுக்கு தனது தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, மும்பையில் சல்மான் கானின் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 நபர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.