சாய்பல்லவியின் தொழில் பக்தி
|சாய்பல்லவி நடிப்பில் கடந்த வருடம் விராட பருவம், கார்கி ஆகிய படங்கள் வந்தன. தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் சாய்பல்லவி தனது தொழில் பக்தி குறித்து அளித்துள்ள பேட்டியில் "செய்யும் தொழிலை நேசித்து விருப்பத்தோடு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. பணியில் மகிழ்ச்சியை தேடிக்கொள்ளும்போதுதான் அந்தப் பணி நமக்கு திருப்தியை அளிக்கும்.
அதற்காக செய்யும் வேலையை சொந்த வாழ்க்கைக்குள் கொண்டு வந்து விடக்கூடாது. தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் வேறு வேறாக பார்க்கும்போதுதான் மானசீக அமைதி கிடைக்கும். நான் எந்த படத்தில் நடித்தாலும் சரி மாலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டால் அந்தப் படத்தைப் பற்றி மீண்டும் யோசிக்கவே மாட்டேன்.
அதேநேரம் படப்பிடிப்பு அரங்குக்குள் அடி எடுத்து வைத்து விட்டேன் என்றால் என் சொந்த வாழ்க்கையை முழுமையாக மறந்து வேலையோடு கலந்து விடுவேன். எந்த வேலையாக இருந்தாலும் சரி தொழில்பக்தியோடு செய்ய வேண்டும். அப்போதுதான் பணி மீது முழுமையாக கவனம் செலுத்த முடியும்'' என்றார்.