கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்ற சாய்பல்லவி
|நடிகைகளில் சிலர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு கடலில் குளிக்கும் புகைப்படங்களையும், இடங்களை சுற்றிப்பார்க்கும் படங்களையும் விதம் விதமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். இன்னும் சிலர் கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்கள்.
நடிகை சாய் பல்லவியும் தற்போது திடீரென்று ஆன்மிக பயணம் தொடங்கி இருக்கிறார். காஷ்மீரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அங்குள்ள அமர்நாத் கோவிலுக்கும் சென்று பனி லிங்கத்தை வணங்கினார்.
அப்போது சாய்பல்லவியை பார்த்த கூட்டத்தினர் முண்டியடித்து அவரோடு செல்பி எடுத்துக்கொண்டனர். சாய்பல்லவியின் ஆன்மிக பயண புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகிறது. சாய்பல்லவி நடிப்பில் கடந்த வருடம் தமிழில் கார்க்கி, தெலுங்கில் விராட பருவம் ஆகிய படங்கள் வந்தன.
தற்போது சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்டு செய்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.