< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா படத்தில் முதல் முறையாக இணையும் சாய்பல்லவி
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா படத்தில் முதல் முறையாக ... - வெளியான தகவல்

தினத்தந்தி
|
17 May 2024 8:32 AM IST

இந்த தகவல் உண்மையாக இருந்தால் விஜய் தேவரகொண்டா மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் முதல் படமாக இது அமையும்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவின் புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனை தில் ராஜூ தயாரித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார். இதனை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் 59-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சாய் பல்லவியிடம் படக்குழு பேசிவருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் விஜய் தேவரகொண்டா மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் முதல் படமாக இது அமையும். இதனால், இருவரது ரசிகர்களும் அவர்களை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் செய்திகள்