'வருமானத்தை தியாகம் செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக வருவது பாராட்டுக்குரியது' - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து
|நடிக்க வந்தபோதே அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி வெற்றி கண்டவர் நடிகர் விஜய் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்திருக்கும் நண்பர் விஜய்க்கு வாழ்த்து கூறும் செய்தி இது. நண்பர் விஜய்யின் கட்சிக்கு பின்புலமாய் உள்ள அர்ப்பணிப்பு ஆச்சரியமளிக்கிறது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது.
'எஸ்.எஸ்.'(சூப்பர் ஸ்டார்) போட்டியிலிருந்து விலகி 'சி.எம்.'(முதல்-அமைச்சர்) போட்டிக்குள் நுழையும் ஆக்ஷன் அதிரடியாகவும் உள்ளது. முழுநேரமாக வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
ஆனால், மகாராஜா ஒருவர் முற்றும் துறந்து முனிவராவது போல, நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை, நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்கப்போகிறார் என்பதைக் கண்டு மனம் சங்கடம் கொண்டது. சினிமா ரசிகனாக, விஜய் விரும்பியாக வேண்டுமா இவ்வளவு தியாகம்? இவ்வாறு பல கேள்விகள். அவர் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். இருக்கலாம்.
அரசியல் ஒரு சூரசம்ஹார சூட்சமம் என்பர் அதன் ஆழம் அறிந்தவர்களும், அளக்கத் தெரியாவதர்களும். 'சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்...' என இந்த நேரத்தில் கண்ணதாசன் காதோரம் கிசுகிசுக்கிறார்.
நடிக்க வந்தபோதே அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி தமிழகத்தில் வெற்றி கண்டவர். அதிர்ந்து பேசா அமைதியே தன் அடையாளமாக கொண்டவரும், மவுனத்தையே தனது தாரக மந்திரமாகக் கொண்டவருமான அன்பர் விஜய், அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீதுள்ள அக்கறையால் நாம் யோசித்தாலும், அவர் சாமர்த்தியமாக ஆலோசித்துவிட்டுத்தான் கால் பதிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. 'அமைதியான கடலே ஆழிப்பேரலையையும் உருவாக்குகிறது' என்பதால் மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரும் விஜய்யை நெஞ்சார வாழ்த்துகிறேன்."
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.