< Back
சினிமா செய்திகள்
ஆறு நாட்களில் ரூ.410 கோடி வசூல் - ஆதிபுருஷ் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா செய்திகள்

ஆறு நாட்களில் ரூ.410 கோடி வசூல் - 'ஆதிபுருஷ்' படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Jun 2023 3:48 PM IST

'ஆதிபுருஷ்' திரைப்படம் ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மும்பை,

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இயக்குனர் ஓம் ராவத் இயக்கிய 'ஆதிபுருஷ்' திரைப்படம் கடந்த ஜூன் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ஆரம்பித்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வந்தது.

குறிப்பாக படத்தின் கிராபிக்ஸ் தரம் மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இது தவிர ராமர், அனுமார் ஆகியோரை காட்சிப்படுத்திய விதம் குறித்தும் சில மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் கிடைத்து வந்தது. இதனிடையே திரையரங்கில் அனுமாருக்கு ஒரு இருக்கை ஒதுக்குமாறு 'ஆதிபுருஷ்' படக்குழு கேட்டுக்கொண்டது பேசுபொருளாக மாறியது.

இத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டாலும், 'ஆதிபுருஷ்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்