ரூ.200 கோடி மோசடி புகார்: ஜாக்குலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை
|ஜாக்குலின் மீது நோரா பதேஹி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பணமோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பரிசு பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்துள்ளதாகவும், சுகேஷ் சந்திரசேகரின் மோசடிகள் தெரிந்தே அவருடன் பழகி பரிசு பொருட்களை அவர் பெற்றுள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஜாக்குலின் மீது நோரா பதேஹி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு சதிசெய்து இந்த வழக்கில் என்னை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்க வைத்து உள்ளார். என்னுடன் நேரடியாக மோத முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மாடலிங் துறையிலும், சினிமாவிலும் எனது வளர்ச்சி பிடிக்காமல் பொய் வழக்கு போட்டு உள்ளனர்" என்று கூறியுள்ளார்.