ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்
|ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார். மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஜாமீனும் பெற்றார். அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. பின் னர் அவர் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.