ரூ.1 கோடிக்கு உத்தரவாதம்: நடிகர் சிம்புக்கு சென்னை ஐகோர்ட்டு ஆணை
|தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை,
வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்ததாகவும், அந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021ம் ஆண்டு அளித்ததாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிக்கு வரவில்லை என்றும், எனவே, கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு தடை விதிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.