விவேக் ஓபராயிடம் ரூ.1½ கோடி மோசடி- தயாரிப்பாளர் கைது
|விவேக் ஓபராயிடம் ரூ.1½ கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் சாஹோவை போலீசார் கைது செய்தனர்.
இந்தியில் முன்னணி நடிகராக திகழும் விவேக் ஓபராய் தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சாஹோவுடன் இணைந்து விவேக் ஓபராய் பட தயாரிப்பில் ஈடுபட்டார். தனது பங்காக ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கினார்.
இந்த பட நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கை சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் கவனித்து வந்தனர். இந்தநிலையில் பட நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடு நடப்பதை விவேக் ஓபராய் கண்டுபிடித்து மும்பை போலீசில் புகார் அளித்தார்.
புகாரில், தனது பணத்தை கையாடல் செய்து 'நகைகள் வாங்குவது, நிலங்களில் முதலீடு என தனிப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளர் சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவி மற்றும் தாயாரை தேடி வருகிறார்கள். சாஹோ மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.