நடிகர் பிரபாசை சந்தித்த ரோஜா
|சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் பிரபாசின் பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜூ நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜா கலந்து கொண்டார்.
பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபல நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தகவல். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிட்டு நல்ல வசூல் பார்க்கிறார்கள்.
பிரபாசின் பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், அவரது பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க பிரபாஸ் குடும்பத்தினருடன் கிராமத்துக்கு வந்திருந்தார். பிரபாசை காண வீட்டின் முன்னால் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கிராமத்தினர் 1 லட்சம் பேருக்கு பிரபாஸ் உணவு வழங்கினார்.
நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜாவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அவரும், பிரபாசும் சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கிருஷ்ணம் ராஜூவுக்கு 2 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவிடம் கட்ட முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி ஏற்பாடு செய்வதாக ரோஜா உறுதி அளித்தார். கிருஷ்ணம் ராஜூ பெயரில் ரூ.3 கோடியில் பிரபாஸ் அறக்கட்டளை தொடங்கினார். அதன்மூலம் நலிந்தோருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.