< Back
சினிமா செய்திகள்
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பாய்
சினிமா செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 'ராக்கி பாய்'

தினத்தந்தி
|
11 April 2023 1:23 PM IST

நடிகர் சல்மான் கான் ஏப்ரல் 30-ல் கொலை செய்யப்படுவார் என தேதி குறிப்பிட்டு ராக்கி பாய் என்பவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் மும்பை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்து உள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.

அதன்பின், வருகிற 30-ந்தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து பரபரப்படைந்த மும்பை போலீசார், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். அவரது அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

அதில், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய் (கோல்டி பிரார்) இந்த பிரச்சனையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். இன்னும் நேரம் உள்ளது. நேரம் கடந்தால் நீங்கள் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை பார்க்க நேரிடும் என கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. படம் வருகிற 21-ந்தேதி நாடு முழுவதும் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது.

மேலும் செய்திகள்