10 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த ரன்வீர் சிங்-ஆலியா பட் படம்!
|ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் 10 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
மும்பை,
கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி வெளியான படம் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி'. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் கரண் ஜோஹர் ஆவார்.
இதில் ரன்வீர் சிங் ராக்கியாகவும், ஆலியா பட் ராணியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி, டோட்டா ராய் சவுத்ரி, சுர்னி கங்குலி, அமீர் பஷீர், க்ஷிதி ஜோக், அஞ்சலி ஆனந்த் மற்றும் நமித் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். காதல் ஜோடிகளின் வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் சமூக பின்னணியை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப் படம்.
இது வெளியான 10-வது நாளான நேற்று ரூ.13.5 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. இதனை கொண்டாடும் விதமாக அதன் தயாரிப்பு நிறுவனம் தர்மா புரொடக்ஷன்ஸ் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் 10 நாள்களில் ரூ.105.08 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவித்து உள்ளது.