மலையாள இயக்குநர் ஜோஷி வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
|இயக்குநர் ஜோஷி வீட்டில் கொள்ளையடித்த பீகார் மாநில கொள்ளையரை கைது செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
கொச்சி,
பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. இவர் தமிழில் சத்யராஜ் நடித்த 'ஏர்போர்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இவர் இயக்கிய 'ஆண்டனி' கடந்த வருடம் வெளியானது. இவரும், இவர் மகனும் 'கிங் ஆப் கொத்தா' பட இயக்குநருமான அபிலாஷும் கொச்சியில் உள்ள பணம்பிள்ளி நகரில் வசித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன், நள்ளிரவில் ஜோஷி உட்பட குடும்பத்தினர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது, கிச்சன் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலையில் கிச்சன் ஜன்னல் உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோஷி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது இந்த கொள்ளைச் சம்பவம் தெரிய வந்தது.
இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கொள்ளையடித்த நபரை கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.