பாலிவுட் நடிகையின் டுவிட்டர் பதிவால் வந்த வினை; அக்ஷய் குமார் - பிரகாஷ்ராஜ் மோதல்
|2020-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துடன் மோதி வீரமரணமடைந்ததை நடிகை ரிச்சா அவமதித்துள்ளதாக விமர்சனம் செய்தனர்.
புதுடெல்லி
சமீபத்தில் வட இந்திய ராணுவ கமாண்டர் ஒருவர் தனது டுவிட்டர் பதிவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான் ரிச்சா சதா கல்வான் ஹாய் சொல்கிறது என்று பதிவிட்டிருந்தார். நடிகையின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துடன் மோதி வீரமரணமடைந்ததை நடிகை ரிச்சா அவமதித்துள்ளதாக விமர்சனம் செய்தனர்.
இதனிடையே இந்த பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்றும் கூறியுள்ள நடிகை ரிச்சா யாரேனும் புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் ரிச்சா சதாவின் இந்த பதிவு திரைத்துறையில் அக்ஷய்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ள நடிகர் அக்ஷய்குமார், நமது ஆயுதப்படை வீரர்களை விமர்சிப்பது வேதனையாக உள்ளது. அவர்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். என்று கூறியிருந்தார்.
அக்ஷய்குமாரின் இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில், ரிச்சாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து இந்தி பட இயக்குனர் அசோக் பண்டிட் ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே அக்ஷய் குமார் பதிவுக்கு ரிப்ளே செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், உங்களிடம் இருந்து இந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களை விட அந்த நடிகை சொன்னது நாட்டுக்கு பொருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
பிரகாஷ் ராஜூன் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.