< Back
சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் சூரரைப்போற்று கூட்டணி : இன்று வெளியாகிறது சூர்யா 43 அப்டேட்..!
சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் சூரரைப்போற்று கூட்டணி : இன்று வெளியாகிறது 'சூர்யா 43' அப்டேட்..!

தினத்தந்தி
|
26 Oct 2023 12:53 PM IST

'சூர்யா 43' படத்தின் அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளை விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் வென்றது.

தற்போது நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது. அந்த பதிவில் '43 மணி நேரங்களில்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் இது 'சூர்யா 43' படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என்று அந்த பதிவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்