நடிகரான ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட்
|தமிழக முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட், ‘குலசாமி' படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாதிரத்திலேயே அவர் நடித்து இருக்கிறார்.
இதில் விமல், தான்யா ஹோப் ஆகியோரும் நடித்துள்ளனர். சரவண சக்தி டைரக்டு செய்துள்ளார். இந்த படத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதி உள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளது.
குலசாமி படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஜாங்கிட் மற்றும் விமல் புகைப்படங்களுடன் தியேட்டர்களில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதனை வலைத்தளத்தில் பகிர்ந்து ஜாங்கிட் வெளியிட்டுள்ள பதிவில், "நான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள குலசாமி படம் திரைக்கு வருகிறது. சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகளையும், அவர்களை போலீஸ் எப்படி காப்பாற்றுகிறது என்பதையும் பற்றிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
நடிகரான ஜாங்கிட்டுக்கு வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ஜாங்கிட் போலீஸ் அதிகாரியாக பதவி வகித்தபோது பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கதைதான் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படமாக வெளியானது.