ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த கன்னட நடிகர்
|‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபலமான கன்னட நடிகர் ஒருவர் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சென்னை,
அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வேட்டையன் வெளியாக இருக்கின்றது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகிவரும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் மற்றும் ரஜினியின் காம்போவில் இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இப்படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது.
சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து பாடல் காட்சியை படமாக்கி வருகின்றார் லோகேஷ். அப்பாடலில் ரஜினியுடன் இணைந்து பிரபலமான கன்னட நடிகர் ஒருவர் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது அந்த பிரபலமான கன்னட நடிகர் யார் என தெரிய வந்துள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் உபேந்திரா தான் அந்த நடிகராம். ரஜினியும் அவரும் இணைந்துதான் அந்த மாஸான பாடலுக்கு நடனமாடி வருகிறார்களாம்.
மேலும் படத்திலும் உபேந்திரா ஒரு முக்கியமான ரோலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ரஜினி மற்றும் உபேந்திரா காம்போ முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
உபேந்திரா, விஷால் நடிப்பில் வெளிவந்த சத்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.