சிம்பு படத்தின் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்..!
|சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சென்னை,
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.