< Back
சினிமா செய்திகள்
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்படம்... திரையரங்குகளில் இசை கச்சேரி நடத்தும் ரசிகர்கள்...!
சினிமா செய்திகள்

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'வாரணம் ஆயிரம்' திரைப்படம்... திரையரங்குகளில் இசை கச்சேரி நடத்தும் ரசிகர்கள்...!

தினத்தந்தி
|
19 Dec 2023 9:12 AM IST

சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.

சென்னை,

கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இப்படத்தில் சூர்யா, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர்களுக்கு ஜோடியாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பாடல்களுக்கு இன்று வரை ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். இப்படத்தில் ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் இடம்பெற்றிருந்த 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை', 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' போன்ற பாடல்கள் நம்மை காதலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு அமைந்திருக்கும்.

சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 'வாரணம் ஆயிரம்' திரைப்படம் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதலில் சென்னையில் மட்டும் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்ததால் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியானது.

இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடல்களுக்கு வைப் ஆன ரசிகர்கள் திரையரங்குகளில் இசை கச்சேரி நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்