ரீ ரிலீஸ்... 'கில்லி'யின் சாதனையை முறியடிக்குமா 'பில்லா'?
|விஜயின் 'கில்லி' படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் 'பில்லா' இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
நடிகர் அஜித் நடித்து முன்பு வெளியான 'பில்லா' படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் 'பில்லா' இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்த 'கில்லி' படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆனதை ஒட்டி கடந்த வாரத்தில் இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப் படங்களுக்குப் போட்டியாக ஹவுஸ் புல் காட்சிகளால் திரையரங்கம் கொண்டாட்ட களமாக மாறியது. படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே ரூ. 12 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
இதனால், விஜய்யை சந்தித்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துச் சொன்னதுடன், "வருடத்திற்கு ஒரு படம் கட்டாயம் நடிக்க வேண்டும்" என்று வேண்டுகோளும் வைத்தனர். இதனை அடுத்து இப்போது அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
அஜித் பிறந்த நாள் மே 1 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக 'பில்லா' படம் ரீ ரிலீஸ் ஆகிறது. ரஜினி நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக்தான் இது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர்.
இப்போது படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், 'கில்லி' ரீ ரிலீஸ் வசூல் சாதனையை 'பில்லா' முறியடிக்குமா என ரசிகர்கள் இப்போதே இணையத்தில் வாக்குவாதத்தை தொடங்கியுள்ளனர்.