ஷங்கர் படம் பெயரில் மோசடி
|ஷங்கரின் ‘ஆர்சி 15’ படத்தின் பெயரில் மோசடி நடப்பதாக ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
தமிழில் பிரமாண்ட படங்கள் எடுத்து முன்னணி டைரக்டராக இருக்கும் ஷங்கர், கடைசியாக ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் 2018-ல் வெளியானது. கமல்ஹாசனை வைத்து இயக்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் தற்போது தெலுங்குக்கு போய் உள்ளார். அங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு தற்காலிகமாக ஆர்.சி.15 என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு புதுமுக நடிகர் நடிகைகள் தேர்வு நடப்பதாக பொய்யான தகவலை பரப்பி மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து படத்தை தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 'ஆர்சி 15', படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடத்தவில்லை. இதற்காக எந்த ஏஜென்சியையோ, தனிநபரையோ நியமிக்கவில்லை. நடிகர்கள் தேர்வு நடப்பதாக வெளியாகும் தகவல் பொய்யானது. இந்த விஷயத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.