ஷங்கர் படப்பிடிப்புக்கு வந்த சோதனை
|ஆர்.சி.15 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பள்ளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி சிலர் திடீர் தகராறில் ஈடுபட்டனர்.
ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். கியாரா அத்வானி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு 'ஆர்.சி.15' என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரண் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஒரு தனியார் பள்ளியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது சிலர் அங்கு வந்து, 'பள்ளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது' என்று கூறி திடீர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் படப்பிடிப்புக்கு அனுமதி தந்த அந்த மாநில பள்ளி கல்வித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. வேறு பள்ளியில் காட்சியை எடுக்கலாமா அல்லது பள்ளி போன்ற 'செட்' அமைத்து படப்பிடிப்பு நடத்தலாமா என படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள்.