< Back
சினிமா செய்திகள்
கார் மோதி பெண்கள் காயம்; `என்னை தாக்காதீர்கள் - மக்களிடம் கெஞ்சிய பாலிவுட் நடிகை
சினிமா செய்திகள்

கார் மோதி பெண்கள் காயம்; `என்னை தாக்காதீர்கள்' - மக்களிடம் கெஞ்சிய பாலிவுட் நடிகை

தினத்தந்தி
|
2 Jun 2024 9:49 AM GMT

பிரபல பாலிவுட் நடிகை சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண்கள் காயமடைந்தனர்.

ரோடு ரேஜ் என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குவது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.


இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண்கள் காயமடைந்தனர். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "தயவு செய்து என்னை அடிக்காதீர்கள், என்னை தள்ளாதீர்கள்" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்