வீர தீர இளைஞராக வரும் விஷால் - 'ரத்னம்' படம் எப்படி இருக்கு?
|பார்வையாளர்களுக்கு ஆக்சன் விருந்து படைத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.
சென்னை,
சிறுவயதில் தாயை இழந்த விஷால் தாதா சமுத்திரக்கனியை காப்பாற்ற ஒரு கொலையை செய்து விட்டு சிறார் ஜெயிலுக்கு செல்கிறார். தண்டனை முடிந்து வந்ததும் சமுத்திரக்கனிக்கு அடியாளாக மாறி சமூக பிரச்சினைகளில் தலையிட்டு அடிதடி சண்டை செய்கிறார்.
அப்போது நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்ததும் அதீத அன்பு காட்டுகிறார். பிரியாபவானி சங்கரை கொலை செய்ய ஆந்திராவில் இருந்து ரவுடிகள் இறங்குகிறார்கள். அவர்களை துவம்சம் செய்து நிழல்போல் இருந்து பாதுகாக்கவும் செய்கிறார். பிரியா பவானி சங்கர் மீது விஷால் அதீத அன்பு செலுத்துவதன் காரணம் என்ன? ஆந்திர வில்லன்கள் ஏன் அவரை கொல்ல துடிக்கிறார்கள்? அவர்களிடம் இருந்து பிரியா பவானி சங்கரை விஷால் காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.
கட்டுமஸ்தான உடல்வாகுடன் வீர தீர இளைஞராக வருகிறார் விஷால். அடைக்கலம் கொடுத்தவருக்காக உயிரைக் கொடுக்கும் துணிச்சல், எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்தி வீராவேசமாக பொங்கி எழுவது, காதலிக்கும் பெண்ணிடம் அன்பு காட்டுவது என பல்வேறு உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி ஜொலிக்கிறார். சண்டையில் பொறி கிளப்புகிறார். சென்டிமென்ட் காட்சிகளில் உருக வைக்கிறார்.
பகட்டு இல்லாத பக்கத்து வீட்டுப் பெண் போல் வருகிறார் பிரியா பவானி சங்கர். கண்களால் காதலை கசிய விடுவது, குடும்பத்தை பாதுகாக்க அரிவாள்மனை ஏந்துவது என தன் கதாபாத்திரத்தின் பலம் அறிந்து ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆளுமை மிக்க அரசியல்வாதி கேரக்டரில் கம்பீரமாக வருகிறார் சமுத்திரக்கனி. முரளி ஷர்மா, ஹரிஷ் பேரடி, முத்துக்குமார், ஆகியோர் கொடூர வில்லன்களாக மிரள வைக்கிறார்கள்.
விஜயகுமார், ஜெயபிரகாஷ், துளசி, கணேஷ் வெங்கட்ராம், டெல்லி கணேஷ், கஜராஜ், கவுதம் மேனன், ஓய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம், ரங்கநாதன், 'கும்கி' அஸ்வின் என அனைவரும் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபுவின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. ஓரிரு காட்சிகளே வந்தாலும் மொட்டை ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ் கலகலப்பூட்டுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுகுமார் 360 டிகிரியிலும் கேமராவை சுழற்றி மலையிலிருந்து உருண்டோடும் பேருந்து, ராக்கெட் வேகத்தில் படமாக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சி, என கதைக்களத்தின் அதி முக்கியமான காட்சிகளை அசத்தலாக படம் பிடித்து மலைக்க வைத்துள்ளார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையும் பலம். அதீத வன்முறை, லாஜிக் மீறல்கள் குறை. குடும்ப சென்டிமெண்ட் அதிரடி கதையை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக நகர்த்தி பார்வையாளர்களுக்கு ஆக்சன் விருந்து படைத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.