'பொம்மை வாங்கி தர கூட அப்போது... '- ராஷ்மிகா மந்தனா
|என் குடும்ப சூழ்நிலை அறிந்து பெற்றோரிடம் எதையும் வாங்கித்தர கேட்கமாட்டேன் என்று ராஷ்மிகா மந்தனா கூறினார்.
சென்னை,
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெருகின்றன. சமீபத்தில் இவர் நடித்த சீதா ராமம், அனிமல் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்தார்,
'எனக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே பல போராட்டங்களை பார்த்து வருகிறேன். என் சிறு வயதில் வீட்டிற்கு வாடகை கொடுக்கக்கூட பெற்றோர் சிரமப்பட்டார்கள். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
என் குடும்ப சூழ்நிலை அறிந்து பெற்றோரிடம் எதையும் வாங்கித்தர கேட்கமாட்டேன். ஒரு பொம்மை கேட்டு கூட அவர்களை வற்புறுத்தியது கிடையாது. என் குழந்தை பருவ நினைவுகள் என்னை வெற்றியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவிடவில்லை. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அது இல்லாமல் போகலாம்'. இவ்வாறு கூறினார்.