தலைவலியாக மாறிய வீடியோ - அரசியல் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா
|ராஷ்மிகா அரசியல் சர்ச்சையில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பாகி உள்ளது.
மும்பை,
தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி பட உலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராஷ்மிகா மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட அடல் சேது கடல் பாலத்தில் பயணம் செய்து வியந்த அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்தது இப்போது அவருக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.
இந்த பாலத்தின் மூலம் 2 மணி நேரத்தை 20 நிமிடத்தில் மேற்கொள்ள முடிகிறது என்றும், உள்கட்டமைப்பு வசதிகளை அற்புதமாக செய்து இருப்பது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். இந்த பாலம் இந்திய மக்களை இணைக்கிறது என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.
ராஷ்மிகாவின் கருத்தை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடியும் "நிச்சயமாக, மக்களை இணைப்பதையும், வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் இல்லை என பதில் அளித்து இருந்தார்.
இதையடுத்து மோடி அரசு மீது எதற்கு இந்த பாராட்டு என்று ராஷ்மிகாவை காங்கிரசாரும், எதிர்க்கட்சியினரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். வருமான வரி சோதனையில் இருந்து தப்பிக்க மோடியை காக்கா பிடிக்கிறீர்களா என்றும் பலர் அவதூறு செய்துள்ளனர். ராஷ்மிகா அரசியல் சதுரங்க சர்ச்சையில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பாகி உள்ளது.