பாடகியாக விரும்பும் ராஷிகன்னா
|பிறமொழி படங்களிலும் பாட ஆசையாக இருக்கிறது. வாய்ப்பு வரும்போது நிச்சயம் எனக்குள் இருக்கும் பாடகியை எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன் என்கிறார் ராஷிகன்னா.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சினிமா அனுபவங்கள் குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் தொடர்ந்து நீடிக்க சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம். தற்போது எனது முழு கவனமும் நடிப்பின் மீதே இருக்கிறது. திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருக்கிறது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறேன். பிறமொழி படங்களிலும் பாட ஆசையாக இருக்கிறது. வாய்ப்பு வரும்போது நிச்சயம் எனக்குள் இருக்கும் பாடகியை எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன். நடிப்பு என்பது விதவிதமான கதாபாத்திரங்களில் வாழ்வது போன்றது. நம்மை சரியாக புரிந்து கொண்டால் எந்த கதாபாத்திரம் ஆனாலும் ஒன்றிப்போய் நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற முடியும். எனது ஒன்பது ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஒவ்வொரு நடிகரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். நிஜ வாழ்க்கையில் நான் வலிமையான பெண். ஆன்மிக விஷயங்கள் பற்றி அதிகம் பேசுவேன். வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்கிறேன். யோகா, தியானம் செய்வேன். இனிமேல் என்னிடம் உள்ள புதிய திறமையை அனைவரும் பார்ப்பார்கள்'' என்றார்.