நிர்வாண போட்டோ விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரிய ரன்வீர் சிங்
|புதிய தேதியை நிர்ணயித்த பிறகு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தார். இதனை தனது சமூகவலைதளத்தில் ரன்வீர் சிங் பதிவிட்டார்.
இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். இதனை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) செம்பூர் காவல்துறையிடம் நடிகர் ரன்வீர் சிங் மீது புகார் அளித்து இருந்தது. அந்த புகாரில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதோடு, அவர்களின் அடக்கத்தையும் புகைப்படங்கள் மூலம் அவமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 போன்ற பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரன்வீர் சிங் நேரில் விசாரணைக்கு ஆஜராக செம்பூர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் இந்த வழக்கில் காவல்துறையின் முன் ஆஜராக 2 வாரம் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என ரன்வீர்சிங் சிங் கோரியுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். புதிய தேதியை நிர்ணயித்த பிறகு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.