இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் கூட்டணி!
|“தி சர்ஜிகல் ஸ்டிரைக்” பட இயக்குனர் ஆதித்யா தார் இயக்கும் புதிய படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
மும்பை,
2019-ம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம் , கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் "ஊரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்". இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியலை ரன்வீர் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்சய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது.
ரன்வீர் சிங், பத்மாவதி, சிம்பா, கல்லி பாய் என பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்த ரன்வீர் சிங் அதிரடியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு சமூக வலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர். தற்போது "சிங்கம் 4" படத்தில் நடித்து வருகிறார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரன்வீர் சிங், "இது எனக்காக பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுக்கானது. உரத்த குரலில் இதை அறிவிக்கிறேன். எனது அன்பான ரசிகர்களே இதுவரை பார்க்காத சினிமா அனுபவத்தை தருவேன் என சத்தியம் செய்கிறேன். ஊக்கம் நிறைந்த நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் பெரிய திரில்லர் படத்தை உங்கள் ஆசிர்வாதத்துடன் நாங்கள் தொடங்குகிறோம் " எனக் கூறியுள்ளார்.
இயக்குனர் ஆதித்யா தார் நடிகை யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.