ராமாயண கதை... நடிகர் பிரபாஸ் பட வழக்குகள் தள்ளுபடி
|நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாரானது. இதில் பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்து இருந்தனர். இந்த படம் திரைக்கு வந்ததும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆதிபுருஷ் படத்தில் நடித்தவர்களின் உடைகள், வசனங்கள், தோற்றங்கள் அனைத்தும் ராமாயணத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கண்டித்தனர். பிரபாசின் ராமர் தோற்றத்தையும் விமர்சித்தனர். பக்தர்கள் உணர்வை புண்படுத்தி விட்டனர் என்றும் சாடினர்.
ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக சிலர் கோர்ட்டுக்கு சென்றனர். நடிகர், நடிகைகள், டைரக்டர், தயாரிப்பாளருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆதிபுருஷ் படத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆதிபுருஷ் படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பிறகு விசாரணை அவசியம் இல்லை. இதுகுறித்து பல்வேறு கோர்ட்டுகளில் நடக்கும் விவாதங்கள் அனைத்தும் தேவையற்றவை. எனவே ஆதிபுருஷ் படத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவிட்டார்.