'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் தோற்றம் - இணையத்தில் வைரல்
|புகைப்படம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விசாகப்பட்டினம்,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தில் ராம் சரண் இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், சரண் முகத்தை முழுவதுமாக சவரம் செய்து கண்ணாடி அணிந்து கொண்டு சாதாரண உடையில் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக படம் அரசியல் சார்ந்த திரில்லர் கதைக்களத்தில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியது. மேலும், அதில் சரண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் முதல் - மந்திரியாக மாறுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இந்த புகைப்படம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.