< Back
சினிமா செய்திகள்
அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் ராம்சரணுக்கு அவமதிப்பு...!! ஷாருக் கானுக்கு கடும் கண்டனம்
சினிமா செய்திகள்

அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் ராம்சரணுக்கு அவமதிப்பு...!! ஷாருக் கானுக்கு கடும் கண்டனம்

தினத்தந்தி
|
5 March 2024 4:22 PM IST

3 நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்து முடிந்த நிலையில், இந்த விசயம் பரவியதும் ஷாருக் கானுக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாம்நகர்,

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையே வருகிற ஜூலை 12-ந்தேதி திருமணம் நடைபெற முடிவாகி உள்ளது. எனினும், இதற்கு 4 மாதங்களுக்கு முன்பே அதற்கான விசயங்கள் தயாராகி விட்டன. இந்நிலையில், திருமணத்திற்கு முந்தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் 3 நாட்கள் நடந்தன.

இந்த திருமண நிகழ்ச்சியில், பிரபல பாப் ஸ்டார் ரிஹான்னா, உலகம் முழுவதும் உள்ள பெரிய தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஆமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு நடைபெறும் 3 நாட்கள் கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். நடனங்கள் ஆடியும், பாட்டு பாடியும் நிகழ்ச்சி அமர்க்களப்பட்டது. இதில், பாலிவுட் படங்களில் காண முடியாத நிறைய விசயங்கள் நடந்தன.

பாலிவுட்டின் 3 கான்களும் ஒன்றாக இணைந்து மேடையில் நடனம் ஆடியது அவர்களுடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், இந்த நடன நிகழ்ச்சிக்கு முன்னர் ஷாருக் கான் செய்த விசயம் நெட்டிசன்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆட ஷாருக் கான் உள்ளிட்ட 3 நடிகர்களும் தயாரானார்கள். ஆனால், அவர்களுக்கு சரியாக ஸ்டெப் போட வரவில்லை. இதனால், படத்தில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியிருந்த நடிகர் ராம்சரணை அழைப்பது என முடிவு செய்தனர்.

இதன்படி, ஷாருக் கான் மேடையில் இருந்தபடி ராம்சரணை அழைத்துள்ளார். அப்போது அவர், இட்லி வடை ராம்சரண் எங்கே இருக்கிறீர்கள்? என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

3 நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்து முடிந்த நிலையில், இந்த விசயம் பரவியதும் ஷாருக் கானுக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இனவெறி அடிப்படையில் அவர் நடந்து கொண்டார் என குற்றச்சாட்டுகள் குவிய தொடங்கின.

ராம்சரணின் ஒப்பனை கலைஞரான ஜீபா ஹசன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், ஷாருக் கானின் செயலுக்கு எதிராக, தன்னுடைய வருத்தங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், இதன்பின்பு, நான் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விட்டேன். ராம்சரண் போன்ற நடிகரை அதிகம் அவமதிப்பு செய்த உணர்வை அடைந்தேன் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, தென்னிந்திய கலைஞர்கள் சரியாக பாராட்டப்படுவதோ அல்லது மதிக்கப்படுவதோ இல்லை என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

நாங்கள் தென்னிந்திய கலைஞர் என்றவுடன், எங்களுக்கு மிக குறைந்த சம்பளம் கொடுக்க விரும்புவதும், அதுவே டெல்லி அல்லது மும்பையை அடிப்படையாக கொண்ட கலைஞர் என்றால், மூன்று மடங்கு சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதும் நகைச்சுவையாக உள்ளது என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்