ஜூனியர் என்.டி.ஆரைத் தொடர்ந்து ராம் சரணுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
|ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், ஆந்திரா-தெலுங்கானா மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பேராதரவைப் பெற்றதுடன், ஆஸ்கர் விருதும் பெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் என்ற சிறப்பையும் நாட்டு நாட்டு பாடல் பெற்றது.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமியில் ராம் சரணுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் குழுவின் ஒரு உறுப்பினராக ராம் சரண் சேர்க்கப்பட்டிருக்கிறார். ராம் சரண் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிவிப்பை ஆஸ்கர் அகாடமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, நடிகர்கள் குழுவில் புதிய உறுப்பினர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது பெறுவதை கலைஞர்கள் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். ஆஸ்கர் குழுவின் அங்கமாக இருப்பது அதைவிட பெரிய கவுரவம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் 18ம் தேதி நடிகர் குழுவில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இணைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இன்று ராம் சரண் இணைந்துள்ளார்.
ராம் சரண் ஆஸ்கர் அகாடமியில் இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.