< Back
சினிமா செய்திகள்
முனீஸ் ராஜாவை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்... மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

முனீஸ் ராஜாவை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்... மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல்

தினத்தந்தி
|
1 Feb 2024 6:43 PM IST

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த 2022ம் ஆண்டு நடிகர் முனிஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னை,

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த 2022ம் ஆண்டு நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமடைந்த நடிகர் முனிஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திருமணம் குறித்தும் ராஜ்கிரணின் எதிர்ப்பு குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில், 'எனக்கு திப்பு சுல்தான் நைனார் முகம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்த பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள் என தெரியவந்தது. இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை' என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்தார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த பிரச்சனை சில மாதங்கள் சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.

இந்நிலையில் தன் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில், "நானும் முனீஸ் ராஜாவும் 2022-ல் திருமணம் செய்துகொண்டது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது, சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை.

இந்த திருமணததிற்கு பின் என்னை வளர்த்த தந்தையை அதிகமாக நான் காயப்படுத்தியிருக்கிறேன். அப்படி நான் கஷ்டத்தை கொடுத்தும் எனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது என்னை கைவிடாமல் என்னை காப்பாற்றி உள்ளீர்கள். இது நான் எதிர்பார்த்திராத கருணை. என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா" என்று உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்