ஒரேநாளில் ரிலீஸாகும் கங்குவா - வேட்டையன்... பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படுமா?
|கங்குவா மற்றும் வேட்டையன் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகும் பட்சத்தில், இரண்டு படங்களுக்குமான வசூல் பாதிக்கப்படும் என்ற கவலையை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.
சென்னை,
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி களமிறங்கும் என படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல், சூர்யாவின் 'கங்குவா' படமும் அக்டோபர் 10 -ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி சூர்யா மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.
கங்குவா மற்றும் வேட்டையன் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகும் பட்சத்தில், இரண்டு படங்களுக்குமான பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் என்ற கவலையை ரசிகர்கள் முன்வைத்துவருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.