< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கும்  கூலி  படத்தின் ரஜினி லுக்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தின் ரஜினி லுக்

தினத்தந்தி
|
27 Jun 2024 2:12 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ரஜினிகாந்தின் தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிக்கும் "கூலி" படத்தை இயக்குகிறார். இது ரஜினிகாந்தின் 171 -வது படமாகும். சமீபத்தில் வெளியான இந்த படத்துடைய டைட்டில் அறிவிப்பு வீடியோ கவனம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கூலி படத்திற்காக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக லோகேஷ் கனகராஜ் கதை எழுதி வருகிறார். விரைவில் இந்த படத்துடைய ஷூட்டிங் தொடங்க உள்ளது. கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இசை அமைப்பாளர் அனிருத் கூலி படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் வெளியாக உள்ளது.

அன்பறிவ் மாஸ்டர்கள் இந்த படத்திற்கான சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியால் ரஜினிகாந்த் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறார். அதே நேரம் அந்த படத்திற்கு பின்னர் வந்த அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

"கூலி" படத்துடைய ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் "கூலி" படத்திற்கான மாதிரி தோற்ற போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்தின் புதிய தோற்றத்துடன் கண்ணாடி முன்பு நின்றவாறு லோகேஷ் கனகராஜ் புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் விருப்பங்களை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்