விரைவில் ரீ-ரிலீசாகும் ரஜினியின் 'படையப்பா'
|நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிபெற்ற திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலிஸ் ஆனது. கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'படையப்பா' படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி. ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம். 1999-ல் படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகரே இருந்திருக்க முடியாது என்கிற அளவுக்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தார்கள்.
வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி. இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை, ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற்போல இருக்கும். ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.
ரஜினி படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு குறையிருக்காது. அந்த வகையில் இந்த படத்தில் என் வழி தனி வழி, அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் என்னைக்கும் நல்லா வாழ்ந்ததா சரித்தரமே இல்ல, வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல, கஷ்ட்டப்படாம கிடைக்கிறது நிலைக்காது போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானதுடன் இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது.
படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்வது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசி உள்ளார் தேனப்பன். சமீபத்தில் கோகுலம் ஸ்டுடியோவில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்தார் தேனப்பன். இருவரும் சினிமா தொடர்பாக பல விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது படையப்பா ரீ-ரிலீஸ் பற்றியும் தேனப்பன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் படையப்பா படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.