< Back
சினிமா செய்திகள்
மீண்டும் வெளியாகும் ரஜினியின் முத்து திரைப்படம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்....!
சினிமா செய்திகள்

மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'முத்து' திரைப்படம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்....!

தினத்தந்தி
|
4 Nov 2023 4:36 PM IST

ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

1995-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'முத்து'. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

'தென்மாவின் கொம்பத்' என்னும் மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தற்போதுவரை இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக படத்தில் இடம் பெற்ற 'தீபாவளி பரிசு' நகைச்சுவை காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.

காமெடி காட்சிகள் ஒருபுறம் இருக்க, ரஜினியின் மாஸ் காட்சிகளும், பன்ச் வசனங்களும் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது', 'நா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்' உள்ளிட்ட பன்ச் வசனங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் சண்டை காட்சிகள், தெறிக்கும் பன்ச் வசனங்கள் என அனைத்திலும் சிறப்பாக இருந்த 'முத்து' படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், பாடல்களும் தான். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தற்போது கூட அனைவராலும் முணுமுணுக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ள 'முத்து' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கவிதாலயா நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, முத்து மீண்டும் வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளது. எனவே வருகிற டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் மீண்டும் வெளியாகலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்