'கூலி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்ற ரஜினி
|ரஜினியின் அடுத்தப் படமான ‘கூலி’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
சென்னை,
வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி'படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படம்தான் கூலி.
முதலில் கூலி டைட்டில் டீசர் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஷ் செய்யும் போட்டோவை லோகேஷ் ஷேர் செய்திருந்தார். அப்போதே அவர் 'கூலி' படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கூலி படத்தில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக லோகேஷ் டிவிட் செய்திருந்தார். கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்திற்கும் கிரிஸ் கங்காதரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அதோடு ரஜினியுடன் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனால் லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ரஜினி இன்று ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார். கூலி படப்பிடிப்புக்காகவே ரஜினி ஐதராபாத் சென்றுள்ளதாகவும், நாளை முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ்ஜும் அவரது குழுவினரும் ஏற்கனவே ஐதராபாத் சென்றுவிட்ட நிலையில், தற்போது ரஜினியும் சென்னையில் இருந்து விமானத்தில் அங்கு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயற்சித்தனர். ஆனால், செய்தியாளர்களை சந்திக்காத ரஜினி, ரசிகர்களுக்காக தனது கையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து விரைந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் சென்ற ரஜினியை அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு முன்னணி ஹீரோவுமான மோகன்பாபு விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ரஜினியும் மோகன்பாபுவும் வெளியாகும் வீடியோக்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனிடையே கூலி ஷூட்டிங் தொடங்கும் முன்பே இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்களின் பட்டியலை லோகேஷ் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
'கூலி' படத்தில் ரஜினியுடன் நடிக்கவிருப்பதை சத்யராஜ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ஆனாலும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.