< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர் - அமிதாப் பச்சன் புகழாரம்
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் 'அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர்' - அமிதாப் பச்சன் புகழாரம்

தினத்தந்தி
|
21 Sept 2024 11:21 AM IST

நடிகர் அமிதாப் பச்சன் 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அமிதாப் பச்சன், ரஜினிகாந்தை பாராட்டி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 1991-ம் ஆண்டு முகுல் எஸ்.ஆனந்தின் திரைப்படமான 'ஹம்' படத்தில் ரஜினியுடன் திரையுலகைப் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் தம்பியாக நடித்துள்ளார். 'ஹம்' படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் செட்டின் தரையில் மட்டுமே படுத்துக் கொள்வார் என்று பகிர்ந்து கொண்டார். அவர் மிகவும் எளிமையானவர், மேலும் ரஜினிகாந்த் 'அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர்' என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் 'அந்தா கானூன் மற்றும் ஜெராப்தார்' போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படம் 'வேட்டையன்' ஆகும்.

மேலும் செய்திகள்