திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்த ரஜினி பட வீடியோ காட்சி
|ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புதியதாக ஒரு வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடிக்கும்போது அதை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் இணையதளத்தில் கசியவிடுவது தொடர்ந்து நடக்கிறது. வாரிசு படப்பிடிப்பில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனால் படப்பிடிப்பை பாதுகாப்போடு நடத்துகிறார்கள். இந்த நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோவும் இணையத்தில் கசிந்துள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பை சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கினர். பின்னர் எண்ணூரில் நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புதியதாக ஒரு வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி. கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி போன்றவை இடம் பெற்று உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படக்காட்சி கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடத்துகின்றனர்.