விரைவில் 'கூலி' படப்பிடிப்பு - சென்னை திரும்பிய நடிகர் ரஜினி
|நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை,
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. இதனை பெற்றுகொள்வதற்காக ரஜினி அபுதாபி சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள பிஏபிஎஸ் இந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலின் தலைமை அர்ச்சகரிடம் ஆசி வாங்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டன.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் 'வேட்டையன்'. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் இப்படத்திற்கு 'கூலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
'கூலி' படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி அடுத்த மாதம் 6-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.